பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பலுக்கல் காவல்நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சுந்தரலிங்கம் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு காவல்நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் களியக்காவிளை பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய பெண் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. இதனையடுத்து எனக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து புகார் அளிப்பதற்காக பலுக்கல் காவல் நிலையத்திற்கு சென்றபோது சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் உதவுவது போல பேசி என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பிறகு எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை அளிப்பதாக கூறி ஒரு மருத்துவமனைக்கு சுந்தரலிங்கம் அழைத்து சென்றுள்ளார். அங்கு எனக்கு தெரியாமலேயே கருக்கலைப்பு செய்துள்ளனர். எனவே சுந்தரலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் மார்த்தாண்டம் மகளிர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், போலீஸ்காரர் அபிஷேக், விஜய், கணேஷ் குமார், டாக்டர் உள்பட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.