அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள தள்ளிப்போகாதே படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா தற்போது குருதி ஆட்டம், தள்ளிப் போகாதே, அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படத்தை இயக்குனர் கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் தள்ளிப் போகாதே படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கண்ணன், ‘விண்ணைத்தாண்டி வருவாயா, 96 படங்களை போல தள்ளிப் போகாதே படம் ஒரு அழகான காதல் கதை. இந்த படத்தில் அதர்வாவும், அனுபமாவும் ஜோடியாக நடித்துள்ளனர் .
அதர்வாவுக்கு ‘ஈட்டி’, அவர் அப்பா முரளிக்கு ‘இதயம்’ மாதிரி இந்த படம் வெற்றியை கொடுக்கும். இந்த படத்தில் வில்லன் கிடையாது. சூழ்நிலைகள் தான் வில்லன். கபிலன் வைரமுத்து பாடல்களையும், வசனங்களையும் சிறப்பாக எழுதியுள்ளார்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து பேசிய நடிகர் அதர்வா, ‘எனக்கு வரலாற்று படங்களிலும், புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை கதைகளிலும் நடிக்க வேண்டும் என ஆசை’ என கூறியுள்ளார். அப்போது அவரிடம் ‘உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் யார் மிக மென்மையானவர்?’ என கேட்கப்பட்டது. இதற்கு அதர்வா சற்றும் யோசிக்காமல் ‘அனுபமா’ என பதிலளித்துள்ளார்.