கேரளாவை உலுக்கிய தங்ககடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கியமான பிரமுர்களுக்கு தொடர்பு இருப்பதாக சுவப்னா சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து முதல்-மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் சுவப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரளஅரசு போக்குவரத்து கழக பேருந்து டிரைவர் ஒருவரை விமர்சித்து முக நூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து வக்கீல் கிருஷ்ணராஜ் மீது சட்டப்பிரிவு 295 ஏன் கீழ் ஜாமீனில் வெளியே வரமுடியாத விதமாக கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பற்றி பாலக்காட்டிலுள்ள வீட்டில் வைத்து நிரூபர்களுக்கு சுவப்னாசுரேஷ் பேட்டியளித்தபோது “முதல்-மந்திரி பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்கு மூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை.
தன்னுடன் உள்ளவர்களை குறிவைத்து காவல்துறை நடவடிக்கை மேற்கொள்கிறது. சரித்குமாரை காவல்துறையினர் பிடித்துச் சென்று, 1 மணிநேரத்தில் விடுவிப்பார்கள் என ஷாஜ் கிரண் கூறியதுபோல் நடந்தது. எனது வக்கீல் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யும் என்றார். அதைபோன்றும் நடந்துவிட்டது. என்னை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆகவே என்னை கொன்று விடுங்கள், அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும்” என்று அவர் தெரிவித்தார்.