சென்னையில் பணி மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் சக ஊழியரை ஓருவர் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விவேக்(30) என்பவர் ஹாத்வே தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி பிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் விவேக் அயனாவரம் பக்தவச்சலம் தெருவிற்கு இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இதனையடுத்து விவேக் வழக்கம்போல் நேற்று எழும்பூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் மனைவியை இறக்கி விட்டு விட்டு தன்னுடைய அலுவலகத்திற்கு வந்து பணியை தொடங்கியுள்ளார்.
அதே அலுவலகத்தில் பழைய வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் முன்பு வேலை பார்த்தார். ஆனால் அவர் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் சவுக்கார்பேட்டைக்கு பணிமாற்றம் செய்தனர். இதனையடுத்து தன்னை மீண்டும் எழும்பூர் அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து சந்தோஷ் தினமும் எழும்பூர் அலுவலகம் சென்று தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் எழும்பூர் அலுவலகம் வந்த சந்தோஷ், விவேக்கிடம் சென்று சாப்பிட்டியா என்று பணிவுடன் கேட்டுள்ளார்.
அதற்கு விவேக் சாப்பிட்டு விட்டேன் என பதில் அளித்து பேசிக் கொண்டிருந்தபோது “எல்லோரும் சேர்ந்து சதி செய்து என்னை மாற்றி விட்டீர்கள்” என்று வழக்கம்போல் சந்தோஷ் பேச ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து விவேக் வேண்டுமானால் நீ இங்கு வந்து வேலை செய் எனக் கூறியுள்ளார். அப்போது கோபமடைந்த சந்தோஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விவேக்கை சரமாரியாக குத்தியுள்ளார். இதனைப் பார்த்து அருண்குமார் என்ற ஊழியர் விவேக்கை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரையும் சந்தோஷ் கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக அவர் தன்னுடைய அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார். இதனையடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கத்தியுடன் குத்த பாய்ந்த சந்தோஷ் அலுவலக கட்டிடத்தில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று பதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது பற்றி எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனையடுத்து கொலையாளி சந்தோஷ் கைது செய்யப்பட்டு எழும்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.