தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் திமுக அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்தது. இந்த உள்ளாட்சித்தேர்தலில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன. அந்தவகையில் கோவை குருடம்பாளையம் ஒன்றியத்தில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால் பிரபலமானார். பலரும் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்கி வந்தனர்.
இதனையடுத்து தற்போது முத்து என்பவர் அடித்துள்ள நோட்டீஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் 9வது வார்டில் 6 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். அதில் அவர், தனக்கு வாக்களித்த 6 வாக்காளர்களுக்கு நன்றியும், வாக்களிக்காமல் பாடம் கற்பித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் 25% வாக்குகள் பந்தத்தின் பிடியிலும், 25% வாக்குகள் பணத்தின் பிடியிலும், 25% வாக்குகள் பாட்டிலின் பிடியிலும், 25 சதவீத வாக்குகள் நம்ப வைத்து பொய்யாக்கியும் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தான் உடைந்து போவேன் என யாரும் நினைக்க வேண்டாம் அது மட்டும் நடக்காது. மேலும் தனது பொது சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.