மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டமன்றத்தை முடக்கினார். மேற்கு வங்க சட்டப்பேரவையை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. மாநில தலைமை பொறுப்பில் இருப்பவர் அரசியல் சட்ட விதிகளை காப்பவராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் டுவிட் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஆளுநர் ஜக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலினுக்கு தகுந்த விளக்கம் அளித்துள்ளார். அதாவது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே சட்டமன்றம் முடக்கப்பட்டது. உண்மையை உறுதி செய்து கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் புண்படுத்தும்படி உள்ளதாக ஜக்தீப் தன்கர் வேதனையுடன் டுவிட் பதிவு செய்துள்ளார்.