பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்பி சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் அதிமுக, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது, 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும். 3வது முறையாக வெற்றிக் கனியை பறிப்போம் என்றார். அதே போல பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வருகின்ற தேர்தலில் எங்களின் கூட்டணி தொடரும், அதிகமான இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, உலகத்திலேயே மிக தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் என்னால் உரையாற்ற முடியவில்லை. ஏனென்றால் எனக்கு தெரியாது. உரையாற்ற முடியாமல் இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆகையால் முதற்கண் உங்கள் முன்பாக அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.
தமிழ் நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் அனைத்துமே மிகவும் தொன்மையானவை. உலக கலாச்சாரத்திற்கும், உலக விழுமியங்களுக்கும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் தத்துவங்கள் அறிவியல், கலை, சுதந்திர போராட்டத்திற்கும், தமிழர்களின் பங்களிப்பு மிக மகத்தானது. இதை யாராலும் மறக்க முடியாது. அதற்கு நான் தலை வணங்குகின்றேன்.
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் மிகுந்த முன்னேற்றம் கண்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய வழிகாட்டுதலின்படி தற்போதைய முதலமைச்சர் ஐயா அவர்களுடைய வழிகாட்டுதலில் இந்த ஆட்சி தொடரும். அதேபோல சிறப்பாகவே இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.