“நேரம்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கிய மலையாள திரைப்படமான “பிரேமம்” தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 7 வருடங்களுக்கு பின் அல்போன்ஸ் இயக்கிய “கோல்டு” திரைப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உட்பட பல மலையாள நடிகர்கள் நடித்து உள்ளனர். இப்படத்தை பிருத்விராஜின் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ராஜேஷ் முருகேசன் இப்படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த திரைப்படம் டிச..1ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
முதல் நாள் மலையாளத்தில் மட்டுமே ரிலீஸ் ஆகியது. அடுத்த நாள் தமிழிலும் வெளியாகியது. இதற்கிடையில் கோல்டு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியது. இது தொடர்பாக அல்போன்ஸ் புத்திரன் தன் சமூகவலைதளப்பக்கத்தில் “கோல்டு திரைப்படம் தொடர்பான எதிர்மறை விமர்சனங்களை அனைவரும் பார்க்கவேண்டும். என்னை பற்றியும் என் படத்தை பற்றியும் பல கிண்டல்கள், அவதூறுகளை நீங்கள் கேட்கும்போது ஒரு மகிழ்ச்சி உண்டாகலாம். எதிர்மறையான விமர்சனம் பதிவிட்டவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள். நானும், இப்படத்தில் பணியாற்றிய எவரும் உங்களை வெறுக்கவேண்டும், புண்படுத்த வேண்டும், உங்கள் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்க வேண்டும் என நினைக்கவில்லை. என்னையும் என் குழுவையும் மீண்டும் சந்தேகிக்கவேண்டாம்” என்று கூறினார்.