சத்தீஸ்கர் கோர்பா மாவட்டத்திலுள்ள ஜாஷ்பூரில் துத்ராம் பன்னா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம்(20) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் நீல்குஷம் சென்ற 3 வருடங்களுக்கு முன்பு மதன்பூர் பகுதியிலுள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்போது பள்ளிக்கு போக ஜாஷ்பூர் -கோர்பா இடையில் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அந்த பேருந்து கண்டெக்டர் ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் ஒருக்கட்டத்தில் ஷபாஷ் கானுடன் பேசுவதை விரும்பாத நீல்குஷ் அவருடன் காதலை முறித்து கொண்டார்.
அதன்பின் தன் சொந்த ஊரான ஜாஷ்பூரில் ஒரு நபருடன் நீல்குஷ்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் நீல்குஷ் தன்னிடம் பேசுவதை நிறுத்தியதால் கோபமடைந்த ஷபாஷ் கான் தொடர்ந்து போன்செய்து தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் சென்ற சனிக்கிழமை மாலை ஷபாஷ் கான், நீல்குஷ் வீட்டிற்கு சென்று தன்னை காதலிக்கும்படியும், தொடர்ந்து தன்னிடம் பேசும்படியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷபாஷ் கான் தான் கொண்டுவந்த “ஸ்குரு டிரைவரால்” நீல்குஷின் முகம், கழுத்து, முதுகு, மார்பு பகுதியில் 51 முறை சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் நீல்குஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். நீல்குஷை கொலை செய்த பிறகு ஷபாஷ் கான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நீல்குஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய ஷபாஷ் கானை 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.