வரதட்சனை கொடுமை காரணமாக திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா என்பவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது. அர்ச்சனாவும் சுரேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மூன்று மாதத்திற்குப் பிறகு சுரேஷின் தந்தை 3 லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்றுக் கொண்டு வரும்படி அர்ச்சனாவிடம் கூறியுள்ளார். ஆனால் அர்ச்சனாவின் தந்தையோ இவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். பிறகு இந்த விவகாரத்தின் காரணமாக சுரேஷ் இல்லத்தில் மனக்கசப்பு ஏற்பட்ட காரணத்தினால், சுரேஷும் அர்ச்சனாவும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சுரேஷுக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருந்த காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை அர்ச்சனா தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அர்ச்சனாவின் குடும்பத்தினர் எனது மகள் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டாள், கணவர் சுரேஷ் தான் என் மகளை கொன்று விட்டார் என்று புகார் அளித்துள்ளனர். இது குறித்து அர்ச்சனாவின் தந்தை கூறியபோது “நான் என் மகளை சந்திக்கும் போதெல்லாம் அவரை கண்ணீர் விட்டு கதறி சுரேஷ் குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவிப்பார். எனது மகள் நர்சிங் படித்து முடித்தும் கூட அவரை வேலைக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து டார்ச்சர் செய்து உள்ளனர்” என்று கூறியுள்ளார். எனவே அவர்தான் என் மகளை கொலை செய்துவிட்டார் என்று கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.