தவறாக முடி திருத்தப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 2 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் தனது முடியை திருத்திக் கொள்வதற்காக ஐடிசி மவுரியா ஓட்டலில் உள்ள ஒரு புகழ்பெற்ற அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் தனது முதல் 4 அங்குலம் மட்டும் வெட்டும்படி கூறியுள்ளார். அதனை தவறுதலாக புரிந்து கொண்ட முடி வெட்டும் நபர் அந்தப் பெண்ணின் மொத்த முடியின் நீளமே 4 அங்குலம் உள்ளது போல் வெட்டியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் நிர்வாகத்தினரிடம் கூறியபோது அவர்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், முடி திருத்தம் செய்ததற்கு பணம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அப்பெண்ணின் முடி வளர்வதற்காக சிகிச்சை ஒன்றையும் அளித்ததாக தெரிகிறது.
ஆனால் அந்த சிகிச்சை அந்த பெண்ணிற்கு ஒவ்வாமை ஏற்படுத்தியதால் அப்பெண்ணில் முடி மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் அவருடைய மாடலாக வேண்டும் என்ற கனவு சிதைந்து போனது . அவர் பணியும் பரி போனதாக தெரிகிறது. இதையடுத்து அப்பெண் தனக்கு இழப்பீடு கேட்டு நுகர்வோர் கோர்ட்டை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த ஆர்.கே. அகர்வால் தலைமையிலான அமர்வு “தனது முடியை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பெண் சொகுசு ஓட்டலில் உள்ள கடைக்கு சென்று அதிக பணம் செலவழித்து முடி திருத்தம் செய்துள்ளார். ஆனால் முடி வெட்டுபவரின் கவனக்குறைவால் அப்பெண்ணின் முடி பாதிப்புக்குள்ளானது மட்டுமல்லாமல் பணியும் பறிபோயுள்ளது. இதனால் கடை நிர்வாகம் அந்த பெண்ணுக்கு 2 கோடியை இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.