தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் முதல் கையெழுத்து விவசாய கடன் தள்ளுபடி செய்வது என்று ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். அதன்படி உழவர் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உழவர் திருநாளான இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, எனது முதல் கையெழுத்து கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி செய்வதே. கலைஞர் விவசாய கடன் தள்ளுபடி செய்த போது கேலி செய்தவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதையே செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டு தனது வாக்குறுதியை அவர் கூறியுள்ளார்.