பெல்கோரோட் நகரில் தொடர் குண்டு வெடிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என பிராந்திய கவர்னர் தெரிவித்தார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பல நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷ்ய ராணுவ படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றது. இருப்பினும் உக்ரைன் நாட்டின் எல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் ரஷ்யாவின் பெல்கோரோட் என்ற நகரில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.
சுமார் 4 லட்சம் மக்கள் வாழும் இந்த நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பால் 11 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 39 வீடுகள் பலத்த சேதம் அடைந்ததாகவும், அவற்றில் 5 கட்டிடங்கள் முற்றிலுமாக தரை மட்டமானதாகவும் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார். மேலும் இந்த தொடர் குண்டு வெடிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் படுகாயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ரஷ்யாவின் மூத்த எம்.பி. ஒருவர் பெல்கோரோட் நகரில் உக்ரைன் ராணுவ படைகள் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைன் தரப்பில் இது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.