இங்கிலாந்து நாட்டில் பிரிஸ்டல் என்ற பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இந்த பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஜோனாத்தன் பேம்பர் என்பவர் ஆர்க்டிக் பகுதி குறித்து ஆராய்ச்சி செய்து உள்ளார். இந்த புதிய ஆராய்ச்சியில் கடந்த 43 ஆண்டுகளில் உலகின் மற்ற பகுதிகளை விட ஆர்க்டிக் பகுதி, 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டு இருந்ததை விட, ஆர்க்டிக்கில் சராசரியாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகி இருக்கின்றது. ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பனி அடுக்குகள் 85 % சூரிய ஒளியை எதிரொலிக்கின்றன. இதனால், சூரிய ஒளி புவியை வெப்பமாக்காமல் திருப்பி அனுப்பப்படுகின்றது. இதன்மூலம், பூமி வெப்பமயமாவது தடுக்கப்படுகின்றது. ஆனால், கடல் பனி அடுக்குகள் உருகும்போது, சூரிய ஒளி நேரடியாக விழுவதால் நிலப்பரப்புகள், கடல்களை அதிகம் வெப்பமடையச் செய்கின்றன.