அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சிகள் இணைவது தொடர்பாக டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் வருகை புரிந்துள்ளார். இவர் நிகழ்ச்சி முடிவடைந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், தி.மு.க ஆட்சி 23 ஆம் புலிகேசியின் ஆட்சி போல் அமைந்திருக்கிறது. இவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு என மக்களுக்கு தண்டனை வழங்கி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துபாய் சென்றதற்கான உண்மையான நோக்கம் கூடிய விரைவில் வெளியாகும்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறை உரிய சம்மன் அனுப்பினால் மட்டுமே விசாரணைக்கு ஆஜராவேன். நான் சசிகலாவை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. தமிழகத்தில் அரசு பெட்ரோல், டீசல் ,எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும். அதன்பிறகு மேகதாது அணையை கட்டுவதற்கு அ.ம.மு.க கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு மக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவர் அ.தி.மு.க-அ.ம.மு.க இணைப்பு என்பது காற்றில் பரவும் வதந்தி ஆகும். நான் இதைப் பற்றி பேச விரும்பவில்லை. எங்களுடைய குறிக்கோள் அம்மா வழியில் நல்ல ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதாகும் என கூறினார்.