திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக வலம் வருபவர் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அவருக்கு கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி ஓய்வு மேற்கொள்ளாமல் சென்னை சென்றார். அங்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்றார், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி, அமைச்சரவை கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு தனது பணிகளில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் சில தினங்களுக்கும் முன்னர் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காச்சல் அதிகமானால் அவர் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் தற்போது அவர் உடல் நலம் குணமடைந்து வருகிறார். இந்த தகவல் அறிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் உடனடியாக மருத்துவமனையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். இதனையடுத்து அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் மருத்துவமனை முன்பாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் அமைச்சர் குணமடைந்து வீடு திரும்பியதும் அங்கு சென்று நலம் விசாரிக்குமாறு கூறி அனுப்பி உள்ளனர்.