பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரநகர் 3-வது தெருவில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு தேவனந்தல் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று லட்சுமி மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து லட்சுமி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் வசித்து வரும் ஜெயந்தி என்பவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஜெயந்தி கள்ளச்சாவியின் மூலம் லட்சுமியின் வீட்டின் பூட்டை திறந்து நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஜெயந்தியை கைது செய்து அவரிடம் இருந்த நகையை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.