காவிரி ஆற்றில் குதித்து ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளகூட்டபள்ளி காலனியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் இவருக்கு கீதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆற்று பாலத்தில் நின்றுகொண்டிருந்த விஜயகுமார் திடீரென பாலத்தில் ஆற்றில் குதித்துள்ளார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஜயகுமாரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிபாளையம் காவல்துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.