மர்மமான முறையில் நான்கு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முகமதுபட்டினம் காட்டுக்கொட்டகை பகுதியில் விவசாயியான ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் 2 பசு மாடுகள் மற்றும் ஒரு காளை மாடு திடீரென கீழே விழுந்து கிடந்ததை பார்த்து ராமர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு ஒரு பசுமாடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்தும் அது பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இந்த மாடுகள் இறப்பதற்கு முன்பு சோளம் தின்றதாக ராமர் கூறியுள்ளார். இவ்வாறு நான்கு மாடுகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமர் கூறும்போது குடும்பத்திற்கு வருமானம் தரும் மாடுகள் இறந்து விட்டது. எனவே அந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தொகையை பெற்றுத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.