கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்ற இளைஞன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஈகாட்டூர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கோவிந்தராஜ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோவிந்தராஜ் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் கோவிந்தராஜ் திரும்பி வாராததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர்.
அப்போது மாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே கோவிந்தராஜ் பை, அடையாள அட்டை ஆகியவை கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சந்தேகமடைந்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கும், காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது கோவிந்தராஜ் உடல் கிணற்றில் மூழ்கி இருந்துள்ளது.
இதனைதொடர்ந்து பள்ளிப்பாளையம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் இளைஞன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.