ஒரு கொசு திருடனைக் கண்டுபிடித்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதாவது பின்லாந்து நாட்டில் ஒரு கார் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடியதில் திருடப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரை திருடியவர் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் காருக்குள் சோதனை செய்தபோது அதில் ஒரு கொசு இருந்துள்ளது. அந்த கொசு யாரோ ஒருவரின் ரத்தத்தை குடித்து விட்டு பறக்க முடியாமல் காருக்குள் கிடந்துள்ளது.
உடனே அந்த கொசுவை காவல்துறையினர் எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் கொசுவின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ உடன் சிறையில் இருக்கும் கைதிகளின் டிஎன்ஏ ஒத்துப் போகிறதா என பார்த்துள்ளனர். அப்போது ஒரு கைதியின் டிஎன்ஏ உடன் கொசுவின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ ஒத்துப் போனது. அதன்பிறகு விசாரணை நடத்தியதில் காரை திருடியது அவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.