பாசன கால்வாய் வெட்டப்பட்டுதாகக் கூறி சினிமா பாணியில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கின்றனர். இந்த பகுதிகளில் விவசாயம் ஏரி பாசனம் மூலம் நடைபெறுகிறது. ஆனால் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து சரிவர மழை பெய்யாததால் பாசன கால்வாய் முற்றிலுமாக முடங்கியது. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பகுதிகளில் பாசன கால்வாய் அமைக்க வேண்டும் என பா.ஜ.க மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகி கார்த்திக் பல கோரிக்கை மனுக்களை எழுதி அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகத்திற்கு சென்று இதுதொடர்பாக கார்த்திக் கேட்டுள்ளார். அங்கு அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 1 கோடியே 36 லட்சம் மதிப்பில் பாசன கால்வாய் வெட்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் அதற்கான ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்துள்ளனர். இதன்பிறகு அதிகாரிகள் மோசடி செய்ததற்கான ஆவணங்களை கார்த்திக் திரட்டி அதை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2021-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார்கள்.
அதன்படி மாவட்ட ஆட்சியர், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இளங்காடு கிராம நிர்வாக அலுவலர்கள் பாசன கால்வாய் வெட்டப்பட்டதாக கூறி மோசடி செய்தவர்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கூறினார். ஆனால் இதுவரை மாவட்ட ஆட்சியர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக பொதுநல வழக்கு தொடர்ந்த கார்த்திக்கிடம் சமரசம் பேச அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். எனவே கார்த்திக் பாசன கால்வாய் வெட்டியதாக கூறி மோசடி செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறியுள்ளார். மேலும் அதிகாரிகள் இப்படி அலட்சியம் காட்டுவது மக்களுக்கு அரசின் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது என்றும் கூறியுள்ளார்.