கேரளாவில் பாலியல் துன்புறுத்தலிலிருந்து தப்பிக்க ஒரு பெண் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த புதன்கிழமை அன்று, எர்ணாகுளம் மாவட்டத்தின் Mulanthuruthy ரயில் நிலையத்திலிருந்து குருவாயூர்-புனலூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. இதில் 31 வயது பெண்மணி ஒருவர் பணிக்கு செல்வதற்காக பயணித்துள்ளார். அப்போது அவர் இருந்த பெட்டியில் ஒரு நபரும் இருந்துள்ளார்.
இவர்கள் இருவர் மட்டும் தனியாக அந்த பெட்டியில் இருந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், திடீரென்று அந்த பெண்ணை அடித்து ரயிலில் இருந்த கழிப்பறைக்கு இழுத்துச்சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் அவரின் தங்க நகைகளையும் பறிக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் ரயில் சென்று கொண்டிருக்கும்போதே கதவை திறந்து குதித்து விட்டார். இதனை பார்த்து பதறிய மக்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணின் தலையில் பலமாக அடிபட்டிருப்பதால் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணை துன்புறுத்திய நபர் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த Bijukuttan என்று தெரியவந்திருக்கிறது. அந்த நபர் ஏற்கனவே நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் என்று ரயில்வே காவல்துறையினர் கூறுகின்றனர். தற்போது அந்த நபரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.