2024 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்யா வெளியேற முடிவு.
ரஷ்ய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ். அதன் புதிய தலைவராக இந்த மாத தொடக்கத்தில் யூரி போரிசோவ் நியமிக்கப்பட்டார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தார். அப்போது போரிசோவ் கூறியதாவது, “சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய 2024-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியேறுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா சார்பில் தனி விண்வெளி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
போரிசோவின் இந்த அறிவிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய வெளியேற உள்ளதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவன அதிகாரிகள் ஏற்கனவே கூறியதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், ரோஸ்கோஸ்மாசும் இந்த மாத துவக்கத்தில் ஒரு உடன்பாடு மேற்கொண்டுள்ளன. அதன்படி, அமெரிக்க விண்வெளி வீரர்கள் தொடர்ந்து ரஷ்ய ராக்கெட்டுகளையும், ரஷ்ய விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலங்களையும் பயன்படுத்த முடியும்.