தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்திய அரசு நழுவியது.
இதையடுத்து ஐநாவில் இலங்கையை ஆதரித்ததற்கு நன்றிக்கடனாக சிங்கள அரசு தமிழக மீனவர்களை கைது செய்திருக்கிறது? இதற்கு என்ன செய்யப் போகிறார் எடப்பாடி? என்ன சொல்லப்போகிறார் மோடி? உரிமையை பறி கொடுப்பதில் வெற்றி நடைபோடுகிறது தமிழகம் என்று மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.