சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் கொலை வழக்கில் கைதான 5 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் அக்னிராஜ் (19) என்பவர் கடந்த 5-ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காமராஜர் காலனி பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (22), சிவகங்கை மாடன்குளத்தை சேர்ந்த பொன்னையா (24), உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த தர்மா என்ற தர்மராஜ் (25), திருப்பாச்சேத்தியை அடுத்த தாலிக்குளம் கிராமத்தை சேர்ந்த அருண் என்ற பூச்சி இருளப்பன் ஆகிய 5 பேரை மானாமதுரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் தற்போது மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாலும், தொடர்ந்து குற்றச் செயல்களை செய்து வந்துள்ளதாலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் அவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.