தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் (State Board) கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9-ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அதில் சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைத்தளங்களில் வெளிவந்ததாக செய்தி ஊடகங்கள் வழியாக அறியப்பட்டதன் அடிப்படையில் துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், திருவண்ணாமலை மாவட்டம், போலூர், ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வந்தவாசி, ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலிருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்குக் காரணமான பள்ளிகளைச் சார்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இந்த தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எந்த வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.