வீச்சரிவாள் மற்றும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை அடுத்துள்ள தேவதானப்பட்டி மற்றும் மேல்மங்கலம் பகுதியில் ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் மேல்மங்கலம் பகுதியில் இரண்டு நபர்கள் சாக்குப்பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் பார்த்ததும் அந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி, நாகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையில் வீச்சரிவாள் மற்றும் பட்டா கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.