வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் அத்துமீறி நுழைந்த விவசாயிகளை போலீசார் கடுமையாக தாக்கியதால் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் டெல்லி முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் இணையதள சேவை முடக்கப்பட்ட ஆங்கில ஊடகத்தில் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல சர்வதேச பாடகி ரிஹானா,”ஏன் இதைப் பற்றி யாரும் பேசவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரிஹானா மட்டுமல்லாமல் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிராட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். இவ்வாறு பல பிரபலங்களின் ஆதரவால் மத்திய அரசு பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.
இதுபற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களுக்குப் பிறகு அந்தந்த துறையில் திருத்தங்களுக்கு நிறைவேற்றப்பட்டன. மிக சிறிய அளவிலான விவசாயிகள் இதை எதிர்த்து வருகிறார்கள். அவர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. சட்டங்களை நிறுத்தி வைக்கவும் அரசு தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.