“விவசாயப் பெருங்குடி மக்களுக்காக எதையும் சந்திக்க தயார்” என உண்ணாநிலை போராட்ட நிறைவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்திய போராட்டத்தில் நிறைவுற ஆற்றிய ஸ்டாலின், இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியபோதே நான் எனது உரையை ஆற்றி விட்டேன். ஏற்கனவே காலம் கடந்து கொண்டு போகிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரை தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை தடையை மீறி அனுமதி இல்லாமல் நடைபெறும் போராட்டம் தான் இது. முதலில் மாவட்ட கழகங்களுக்கு எனது நன்றியை கூற வேண்டும்.
சென்னையில் இருக்கக்கூடிய மாவட்ட கழகங்களை சேர்ந்த செயலாளர்கள் போன்ற பலருக்கு எனது நன்றியை தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் நேற்று இந்த நேரம் வரை போராட்டம் நடைபெறுமா? இந்த இடத்தில் நடைபெறுமா? அல்லது போராட்டத்தை நடத்த விடாமல் தடுப்பார்களா? அதனை நாம் மீறும் போது கைது செய்யப்படுவோமா? சிறையில்தான் உண்ணாவிரதப் போராட்டம் தொடருமா? என மிகுந்த ஆவலோடு காத்திருந்தேன்.
நேற்று மாலை வைகோ அவர்கள் கூட என்னிடம் தொலைபேசி மூலமாக பேசினார். அப்போது தடை விதித்தனர் என்ன செய்யப் போகிறோம் என்று கேட்டார். கவலைப்படாதீர்கள் தடையை மீறி நடத்துவோம். நிச்சயமாக போராட்டம் உண்டு என்று கூறினேன். நடத்தி முடித்து விட்டோம். நிச்சயமாக வழக்கு வரும் நாங்கள் பார்க்காத வழக்குகளா? 5 மணி வரைதான் போராட்டம் என்று கூறினோம் இப்போது அதையும் தாண்டி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கும் சேர்த்து வழக்கு வரும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே என்ன வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் அதை சந்திக்க நாங்கள் தயார். எங்களுக்காக இல்லை, டெல்லியில் 23 நாட்களுக்கு மேலாக கடும் குளிரில் போராடிக்கொண்டிருக்கும் அந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். மாவட்ட செயலாளர்கள் அடிக்கடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்வேன். அப்போது மேடை போடுவதற்கு காவல்துறையினர் பல பிரச்சினைகளை எழுப்பி கொண்டிருக்கிறார்களே நாங்கள் வரட்டுமா எனக் கேட்டதற்கு நீங்கள் வர வேண்டாம் அது எங்கள் வேலை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினார் சேகர்பாபு.
ஆகவே ஒருங்கிணைந்து 4 மாவட்ட செயலாளர்கள் மிகக் கட்டுப்பாட்டுடன் இந்த போராட்டத்தை வெற்றியாக நடைபெறுவதற்கு அனைத்து வகையிலும் துணையாக இருந்த அவர்களுக்கு கூட்டணி கட்சியின் தலைவர் சார்பாக எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஒவ்வொரு கட்சியிலிருந்து குறிப்பிட்ட சிலர் அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தோழமைக் கட்சிகளை சார்ந்த அத்தனை பேரும் இங்கே பேசியுள்ளனர். நமது கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் இங்கே சிறப்பாக தங்கள் கருத்துக்களை எடுத்து பேசி உள்ளனர். அவர்களது அத்தனை உரைகளையும் கருத்துக்களையும் மனமுவந்து அவர்களை வழி முனைய கடமைப்பட்டுள்ளேன் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.