ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வைலம்பாடி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகலாந்து பகுதியில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7-ஆம் தேதி விடுமுறையில் வினோத்குமார் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் காளிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வினோத்குமார் உறவினரான வெங்கடேசன் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் வைலம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் கொடைக்கல் பால் குளிரூட்டும் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளும், சற்று தொலைவில் இருக்கும் புதரில் வினோத் குமாரின் சடலமும் கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விபத்தில் சிக்கி வினோத்குமார் இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை புதர் அருகே வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.