தேங்காய் வியாபாரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையம் பகுதியில் தேங்காய் வியாபாரியான தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தீபிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்த மல்லிகா தனது மகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். நேற்று காலை குளத்துப்பாளையத்தில் இருக்கும் சாலையோரம் தங்கராசு மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தங்கராசுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கராசுவை யாரேனும் அடித்துக் கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.