வீட்டில் தாய், மகள் உடல் எரிந்து பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவன் உயிரிழந்துவிட்ட நிலையில் காளியம்மாள் ரயில்வே மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் சண்முகப்பிரியா திருமணம் முடிந்து மதுரையில் வசித்து வருகிறார். இதனையடுத்து இரண்டாவது மகள் மணிமேகலை தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சண்முகப்பிரியா தாயையும், சகோதரியும் பார்ப்பதற்காக மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து காளியம்மாள் வீட்டின் வெளியே நின்று சண்முகப்பிரியா வெகு நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து வீட்டிற்கு உள்ளே இருந்து கருகிய நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சண்முகப்பிரியா வீட்டின் பின்பக்கமாக சென்று அங்கிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது காளியம்மாளும், மணிமேகலையும் தீயில் எரிந்து உடல் கருகி பிணமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகப்பிரியா உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி சூப்பிரண்டு அதிகாரி தீபக், மண்டபம் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி அங்கிருந்த தடயங்களை சேகரித்துள்ளனர்.
மேலும் காளியம்மாள் மற்றும் மணிமேகலையின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சண்முகப்பிரியாவிடம் விசாரித்தபோது, கடந்த 6ஆம் தேதி என் தாய் மற்றும் சகோதரி என்னுடன் மகிழ்ச்சியாக பேசினார்கள் என்றும், நான் ஊருக்கு வருவதற்குள் என்ன நடந்தது என தெரியவில்லை என சண்முகப்பிரியா கூறியுள்ளார். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தாய், மகள் சாவு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.