அலெக்ஸி நவல்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெர்மனி கூறியுள்ளது.
ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், புதினை எதிர்த்து போட்டியிட அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில் சைபீரியாவின் டோம்ஸ்க் நகரில் இருந்து விமானம் மூலமாக அலெக்ஸி நவல்னி கடந்த மாதம் 13 ஆம்தேதி மாஸ்கோ சென்று கொண்டிருந்தார். அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்க தொடங்கியதால், அவர் சுயநினைவை இழந்துள்ளார். அதன் பின்னர் அவர் சென்று கொண்டிருந்த விமானம் நடுவழியில் ரஷ்யாவின் ஓம்ஸ்க் நகரின் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளார். விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் அவர் டீ அருந்துவதாகவும், அதில் வேண்டும் என்றே யாராவது விஷம் கலந்து இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவரை விஷம் வைத்து கொள்வதற்கு முயற்சி செய்ததாகவும், அந்த சதிக்கு பின்னால் புதினின் அரசு இருப்பதாகவும் அவரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
இந்நிலையில் நவல்னி விவகாரம் குறித்த விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க தவறினால் அந்நாட்டுடன் மேற்கொண்டுள்ள ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிடுவோம் என்று ஜெர்மனி எச்சரித்துள்ளது. மேலும் இந்தத் திட்டம் தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடிய நிலைமைக்கு ரஷ்யா எங்களை கொண்டு செல்லாது என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஜெர்மனி கூறியுள்ளது.