அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
ஏழை எளிய மக்களுக்கு அவர்களது பகுதியிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதற்காக அம்மா மினி கிளினிக் நாங்கள் தொடங்கினோம். தமிழகம் முழுவதிலும் 2000 அம்மா மினி கிளினிக் துவக்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்தது மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இன்று தொடக்கப்பட்ட நிகழ்ச்சி அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி பகுதியிலும் இன்றைய தினம் முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் துவக்கவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்டத்திலும் இன்று பல பகுதிகளில் நான் அம்மாவின் மினி கிளினிக்கை துவக்கி வைத்து விட்டு எனது தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதி ஏழை எளிய மக்கள் நிறைந்த பகுதியில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அம்மா மினிக் கிளினிக் தொடங்கி வைத்தேன். அம்மா மினி கிளினிக் மூலமாக மக்களுக்கு காய்ச்சல் தலைவலி போன்றவற்றிற்கு அருகிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். மாலை 4 மணி முதல் 8 மணி வரை சிகிச்சை அளிப்பார்கள். ஏழை எளிய மக்களுக்கு அவர்களுக்கு ஏற்றவாறு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் அருகிலேயே இருந்து சிகிச்சை அளிக்கும் சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த மினி கிளினிக்கில் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என மூன்று பேர் பணிபுரிவார்கள். இந்த முதலமைச்சர் அம்மா மினி கிளினிக்கில் அனைத்து நோய்களுக்கும் தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்படும்.
சர்க்கரை நோய், சேற்றுப்புண், காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் இதுபோன்ற கிராமப்புறங்களில் அதிகமாக வரும் சிறிய நோய்களுக்கு அவர்களது ஊரிலேயே சிகிச்சை அளிக்கும் சூழலை நாங்கள் உருவாக்கி கொடுத்துள்ளோம். அதே போன்று இங்கு வருபவர்களை பரிசோதிக்கும்போது அவர்களுக்கு கடுமையான நோய் ஏதாவது இருப்பது தெரிந்தால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு அவரை அனுமதித்து அவரது தீவிர நோய்க்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.
பொதுவாக கிராமத்தில் வாழ்பவர்கள் இரவு-பகல் பாராமல் உழைப்பவர்கள். நமது உடம்பில் என்ன நோய் இருக்கிறது என்பதை கூட தெரியாமல் இருப்பார்கள். அந்த பாமர மக்களுக்கு கிராமத்திலேயே அம்மா மினி கிளினிக்கை தொடக்கி வைத்துள்ளோம். அவர்கள் அங்கு சென்று பரிசோதித்து உடலில் இருக்கும் நோய்களை தீர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் அம்மா மறைவிற்குப் பிறகும் அவர்களின் வழியிலேயே வந்த எங்கள் அரசு தமிழ்நாடு முழுவதிலும் பல ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்துள்ளோம்.
மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் 30 படுக்கைகளுடன் தொடங்கி அங்கும் உரிய சிகிச்சை அளிப்பதற்கான வழிகளை செய்துள்ளோம். தமிழ்நாடு முழுவதிலும் ஏழை எளிய மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, கழிவு நீர் வெளியேறுதல், அதுமட்டுமின்றி அவர்களின் அடிப்படைத் தேவைகள் என அனைத்தையும் அரசு சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறது என்ற செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன். எடப்பாடி தொகுதியிலே எடப்பாடி ஒன்றியம், நங்கவள்ளி பேரூராட்சி, வனவாசி உள்ளிட்ட பல பகுதிகளில் அடிப்படை தேவைகள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை அம்மாவின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.