அனைத்து நாட்களிலும் கோவில்களில் வழிபாடு செய்யலாம் என்ற அறிவிப்பை வெளிவந்ததை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது குடும்பத்தினர் மற்றும் பாஜக தொண்டர்களுடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள கொப்புடை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர் , “கோவில்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நவராத்திரி ஹோமத்தில் கலந்து கொள்ள வந்த பக்தர்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெளியேற்றி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அர்ச்சகர்களையும், மக்களையும் மரியாதையாக நடத்துவது கிடையாது. இந்நிலையில் காஞ்சீபுரத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஒன்றில் திருநீறு மற்றும் ருத்ராட்சம் அணிந்து வந்த ஒரு சிறுவனை ரவுடி என்று கூறி உள்ளனர்.
இதுவே இந்து பள்ளி ஒன்றில் சிலுவை அணிந்து வந்த சிறுவனை ரவுடி என்று கூறி சிலுவையை கழட்டி இருந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? மேலும் என்னை பற்றி இழிவுபடுத்தி அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார். என்னை நாயுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். கள்வனை கண்டால்தான் நாய் குறைக்கும். சேகர்பாபு தனிப்பட்ட முறையில் பேசினால் என் கைவசம் அவரைப் பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன. இதனை குறித்து பேச வேண்டிய சூழ்நிலை வரும்” என்று எச்சரித்துள்ளார்.