அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தி பங்கேற்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இதனை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறும் தொடர்ந்து இந்தியாவில் உள்ள சில மாநிலங்களின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு வைரஸ் பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து வரும் அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தென்னிந்தியாவிலிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அலங்கார ஊர்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்றாகும். மேலும் இதற்கு மத்திய அரசு சில காரணங்களையும் கூறியுள்ளது. இந்த காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் படியாக இல்லை. சுதந்திரத்திற்காக போராடிய ஒவ்வொருவரும் சிறந்த தலைவர்களே ஆவார். மேலும் ஹஜ் புனித பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையத்தின் பெயர் மட்டும் நீக்கப்பட்டிருந்தது. இது மிகவும் மோசமான செயலாகும். இந்தியாவில் உள்ள முக்கியமான பெருநகரங்களில் சென்னையும் ஒன்று அவ்வாறு இருக்கையில் சென்னை விமான நிலையம் மட்டும் நீக்கப்பட்டது ஹஜ் புனிதப் பயணிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
தொடர்ந்து தமிழகத்தின் கலை, பண்பாடு, சுதந்திரப் போராட்டம், குறித்த பெருமைகளை பறைசாற்றும் அலங்கார ஊர்தி பாஜக அரசு அனுமதிக்க வேண்டும். பாஜக அரசு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தை மனதில் வைத்து அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். தொடர்ந்து தமிழக முதல்வர் பிரதமரை தொலைபேசி வாயிலாக அழைத்து ஹஜ் புனிதப் பயணிகளின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் எனவும், குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி அனுமதிக்க படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்..” என அவர் கூறினார்.