பெங்களூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் படுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது ..
கர்நாடக மாநிலம் உத்திர கன்னாடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா பகுதியை சேர்ந்த 25வயதான உஷா பெங்களூரின் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஓசுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். மேலும் அவர் அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அவருடன் அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 30 வயதான கோபாலகிருஷ்ணனும் வேலை பார்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் உஷாவை ஒருதலையாக காதலிக்க தொடங்கியுள்ளார். மேலும் அவர் தனது காதலை உஷாவிடம் கூறிய பொழுது அவர் மறுத்துள்ளார், மேலும் அவர் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் காலை மீண்டும் மல்லசந்திரா கிராமத்துக்கு அருகே உஷாவை சந்தித்துள்ளார்.
அப்போது கோபாலகிருஷ்ணன் மீண்டும் தனது காதலை உஷாவிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்க்க மறுத்த உஷாவை கோபத்தில் கத்தியால் சரமாரியாக குத்தியதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து கோபாலகிருஷ்ணன் தனது மோட்டார் வாகனத்தில் அங்கிருந்து தப்பித்து கெத்துலாபுரா கிராமத்திற்கு சென்று அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.