இந்தோனேஷியாவில் ராணுவ நீர்மூழ்கி கப்பலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கடற்படை வீரரின் குழந்தை அவர் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக தன்னை விட்டு போக வேண்டாம் என்று கெஞ்சிய வீடியோ ஒன்று அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது.
பாலி தீவின் அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எந்திர கோளாறு காரணமாக இந்தோனேஷியா கடற்படைக்கு சொந்தமான KRI Nanggala-402 ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடற்பரப்புக்கு வரமுடியாமல் கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த 53 கடற்படையினரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் பலியான கடற்படை வீரர்களில் ஒருவரான இமாம் ஆதி (29) அந்த நீர்மூழ்கி கப்பலில் புறப்படுவதற்கு முன்னதாக வீட்டில் அவருடைய மகனுடன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் அந்த கடற்படை வீரரை அவருடைய குழந்தை வெளியே செல்ல வேண்டாம் என்றும், தன்னுடன் இருக்குமாறு கெஞ்சிய காட்சி காண்போரின் மனதை நெகிழ வைத்துள்ளது. இதுவே மகன் தந்தை இருவரும் கடைசியாக எடுத்துக்கொண்ட வீடியோ என இமாம் ஆதி தந்தை எட்டிய சுஜிங்க்டோ கூறியுள்ளார். மேலும் அவருடைய பேரன் இவ்வாறு நடந்து கொண்டது இதுவே முதல் முறை என்றும், எப்போதும் வழக்கமாக இமாம் ஆதி புறப்படும்போது எந்த தொந்தரவும் செய்யாமல் வழி அனுப்பி வைப்பான். ஆனால் இந்த முறை அடம்பிடித்து தந்தையை தடுத்தது விசித்திரமாக உணர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.