முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது, உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அடிக்கடி தமிழகம் மற்றும் தமிழக மக்கள் பற்றி பேசி வந்தேன். இது குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்னையறியாமலேயே நானும் ஒரு தமிழன் தான் என்று கூறினேன். தமிழகத்திற்குள் நுழையும்போது ஒரு பணிவு தானாகவே என்னுள் வந்துவிடுகிறது.
ஏனென்றால் இந்த மண்ணில் என்னுடைய ரத்தம் கலந்திருக்கிறது. தமிழகத்தின் வரலாற்றை பேசாமல் இந்திய வரலாறு குறித்து யாராலும் கூற முடியாது. விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினுக்கு எத்தனை வயது இருக்கும் என எனது தாயாரிடம் கேட்டேன். அதற்கு அவர் 60 க்குள் இருக்கும் எனக் கூறினார். ஆனால் அவருடைய வயது 69 என நான் கூறியபோது அவர் வியப்படைந்தார். ஸ்டாலின் மிகவும் இளமையாக உள்ளார். அவருடைய இளமையின் ரகசியம் குறித்து அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். கடந்த முறை பார்த்ததைவிட தற்போது இளமையாக தெரிகிறார்.” இவ்வாறு அவர் கூறினார்.