பாகிஸ்தான் பிரதமர் தனது உறவினருக்கு வசதி ஏற்படுத்தி தரும்படி அரசு அதிகாரியிடம் கூறும் உரையாடல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள 2 நிமிடம் ஓட கூடிய ஆடியோ பதிவில், பிரதமர் நாட்டை விட தனது குடும்பத்தின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஷெபாஸ் ஷெரீப் பேசுவது போன்ற குரல் கேட்கின்றது. அதில் ஷெரீப், இந்தியாவிலிருந்து மின் உலைக்கான இயந்திர இறக்குமதிக்கு தனது மருமகனான ரஹீல் என்பவருக்கு வசதி செய்து தரும்படி மரியம் நவாஸ் ஷெரீப் என்னிடம் கேட்டுள்ளார் என்று ஷெபாஸ் ஷெரீப், உயரதிகாரியிடம் கூறுகின்றார்.
அதற்கு அந்த அதிகாரி, நாம் இப்படி செய்தோம் என்றால், இந்த விவகாரம் அமைச்சரவைக்கு செல்லும் போது, கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என கூறுவது கேட்கின்றது என்று தி டான் பத்திரிகை தெரிவித்துள்ளது. அதற்கு பிரதமர், அந்த மருமகன் மரியம் நவாசுக்கு ரொம்ப அன்பானவர். இந்த விவரம் பற்றி மரியமிடம் விரிவாக எடுத்து கூறுங்கள். அதன் பின்னர், மரியமிடன் நான் பேசுகின்றேன் என்று ஷெரீப் கூறுகின்றார். அதற்கு பதிலாக, இது அரசியல் சிக்கலை உருவாக்க கூடும் என்று அந்த நபர் எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் கூறுகின்றார். இந்த ஆடியோ கசிவானது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.