சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணடி மலையப்பன் தெருவில் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா, மாலிக், சித்திக், செல்லா ஆகிய 4 பேரும் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அப்துல்லா வீட்டில் தனியாக இருந்தபோது டிப்-டாப்பாக உடையணிந்த 3 மர்ம நபர்கள் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டனர். இதனையடுத்து சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 10 லட்ச ரூபாயை எடுத்து கொண்டனர். மேலும் நீங்கள் செல்போன் வாங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் வந்தது. எனவே உங்களது கடைக்கும் சென்று சோதனை நடத்த வேண்டும் என கூறி அப்துல்லாவை அழைத்து சென்றனர்.
பின்னர் கடையில் இருந்த 20 லட்ச ரூபாயை கைப்பற்றிய அந்த மர்ம நபர்கள் முறையான ஆவணங்களை காண்பித்து பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனை தொடர்ந்து அப்துல்லாவும், அவரது நண்பர்களும் என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு சென்று விசாரித்த போது அதுபோல யாரும் சோதனை செய்ய வரவில்லை என கூறியதால் அப்துல்லா உள்பட 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.