9 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் சிறுமியை விட்டு சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அரசாணிக்குளம் தெற்கு மடவிளாகத்தில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமிக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த சிறுமியிடம் தீபக் ஆசை வார்த்தை பேசி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து 2 பேரும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தீபக் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் தந்தையுடன் வசித்து வந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி தீபக் திருமணம் செய்வதற்கு சிறுமியின் உறவினர் பெண்ணான இந்திராணி என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் தீபக், இந்திராணி ஆகியோர் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.