காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வி மகனுடன் சேர்ந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு செல்வியின் வீட்டிற்கு வந்த மணிவண்ணன் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வி உடனடியாக தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை காவலதுறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி நேற்று தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் முன்பு தனது சகோதரி, மகன் ஆகியோருடன் சேர்ந்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.