சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியம் மீனாட்சி அம்மன் நகர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர் கிஷோர் (19). பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்யுமாறு தன் காதலியிடம் கி்ஷோர் கூறியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த கிஷோர் திடீரென்று நேற்று காலை 8 மணியளவில் வீட்டின் அருகேயுள்ள சுமார் 50 அடி உயரம் கொண்ட உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி, தன் காதலியை திருமணம் செய்துவைக்க வேண்டும் என கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின்வாரியத்துக்கும் தகவல் தெரிவித்து அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். அத்துடன் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கிஷோரை கீழே இறங்கி வரும்படி கூறினர். எனினும் அவர் மறுத்ததால் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை அழைத்து வந்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிஷோர் செவிசாய்க்கவில்லை. அதன்பின் அவரது காதலியை அங்கு அழைத்துவந்து திருமணம் செய்துவைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தனர். அதனை ஏற்று கிஷோர் உயர்மின் அழுத்த கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்.
இதன் காரணமாக தாம்பரம், குரோம்பேட்டை, தாம்பரம் மெப்ஸ் உட்பட தாம்பரம் பகுதி முழுவதும் சுமார் 2½ மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் குரோம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்தனர். இதேபோன்று நேற்று இரவு 9 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (25) என்பவர் குடி போதையில் உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை அறிந்த மின்வாரிய அதிகாரிகள், அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். பின் உயர்மின் அழுத்த கோபுரத்தில்ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் காவல்துறையினர் கீழே இறங்கி வரும்படி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 1 ½ மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்காததால் தீயணைப்பு வீரர்கள், உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி வாலிபரை பிடிக்க முயற்சி செய்தனர். அந்த வாலிபர் அவர்களுடன் இறங்குவது போன்று கீழே இறங்கி வந்து, பிறகு இருட்டை பயன்படுத்தி அருகில் உள்ள சுவர் மீது ஏறிகுதித்து தப்பிஓடினார். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர். இதன் காரணமாக தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு நேரத்தில் உறங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஒரேநாளில் காலை மற்றும் மாலையில் 2 வாலிபர்கள் உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.