ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா(25). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்தூர் தாலுகாவை அடுத்துள்ள செல்லூர் கிராமத்தில் வசிக்கும் விமல்ராஜ் என்பவருடன் திருமணமாகியுள்ளது. தற்போது இத்தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரேஷ்மாவின் வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான தென்னரசு என்பவர் வந்து சென்றுள்ளார். இதனை அதே ஊரை சேர்ந்த பாலமுருகன்(20) மற்றும் முத்துக்குமார்(30) ஆகியோர் ரேஷ்மாவின் கணவரான விமல்ராஜிடம் தவறாக கூறியுள்ளனர்.
இதனால் விமல்ராஜ் ரேஷ்மாவை கண்டித்துள்ள நிலையில் ஆத்திரமடைந்த ரேஷ்மா தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முத்துக்குமார் மற்றும் பாலமுருகனை திட்டியுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் ரேஷ்மாவிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இதனையடுத்து மனமுடைந்த ரேஷ்மா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரேஷ்மாவின் குழந்தைகள் வெகு நேரம் அழுத சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரேஷ்மா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரேஷ்மாவின் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில் ரேஷ்மாவின் வீட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் எனது சாவுக்கு பாலமுருகன் மற்றும் முத்துக்குமார் தான் காரணம் என இருந்தது. இதனைஅடுத்து காவல்துறையினர் முத்துக்குமார் மற்றும் பாலமுருகனிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ரேஷ்மாவை திட்டியதாக ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பரமக்குடி ஆர்.டி.ஓ தங்கவேலுவும் விசாரணை நடத்திய நிலையில் தற்கொலைக்கு தூண்டியவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.