நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் சிவராம பெருமாள், திமுக மருத்துவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை வைத்திருந்தார். இவருடைய மனைவி சீதா, அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சிவபெருமாள் கடந்த ஜூலை 12 ஆம் தேதி, கொரோனா தொற்று தொடர்பான பணிக்குச் சென்று வந்த மனைவியை , தனது காரில் வீட்டிற்கு அழைத்து வரும் போது, வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் என்பவர், சிவராம பெருமாளின் காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
அப்போது சிவராம பெருமாள், அரசு மருத்துவமனையில் தனது மனைவியை கோவிட் பணி முடித்து அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் கூறியதால், கோபமடைந்த டிஎஸ்பி பாஸ்கரன், ஆங்கிலத்தில் தான் பேசுவாயா? தமிழில் பேச மாட்டாயா? என ஒருமையில் பேசி டாக்டர் சிவராம பெருமாளையும், அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பொது இடத்தில் பலரின் முன்னால் தன்னையும், மனைவியையும் டிஎஸ்பி அவமானமாக திட்டியதால், சிவராமபெருமாள் துயரத்தோடு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதைத்தொடர்ந்து டிஎஸ்பி , சிவராம பெருமாளை தொடர்ந்து மிரட்டி வந்ததால் மருத்துவர் மிகுந்த மனசோர்வுடன் காணப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சிவராமபெருமாள் தனது மரணத்துக்கு காரணம் டிஎஸ்பி பாஸ்கரன் தான் என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.