செல்போனை வாங்குவதற்காக சிறுவனை கடத்திய பெண்ணிற்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
சிவமெக்கா மாவட்டத்தில் உள்ள ஒசமனே பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல் நிலையத்திற்கு ஒரு பெண் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனது தோழி என்னுடைய செல்போனை திருடி கொண்டார். அதைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். திருப்பி தர மறுத்து விட்டார். இது குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் என் தோழியிடம் இருந்து செல்போனை வாங்குவதற்காக அவரது மகனை நான் கடத்தினேன் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு காவல்துறையினர் உடனடியாக சிறுவனை அழைத்து கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் சிறுவனுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது காவல்துறையினர் வந்த பெண்ணிடம் இருந்து சிறுவனை மீட்டனர்.மேலும் செல்போன் திருட்டு போனால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது குழந்தையை கடத்தி வைத்து மிரட்டுவது குற்றமாகும் என அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறு அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது