நடிகர் கார்த்தி தனது பிறந்தநாளில் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் கார்த்தி கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, கடைக்குட்டி சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி என பல ஹிட் படங்களை கொடுத்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று (மே 25) பிறந்தநாள் கொண்டாடி வரும் கார்த்தி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி; தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு நீங்கள் எனக்கு தரும் பரிசாக இருக்கும். நன்றி’ என தெரிவித்துள்ளார்.