தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவள்ளூரில் பாலாஜி பாலன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்றுள்ளார். அவரிடம் ஊரடங்கு அபராதம் என போலீசார் ரூபாய் 500 வசூலித்துள்ளனர். இதையடுத்து மருந்து வாங்க பணம் இல்லாமல் வீடு திரும்பியவர் மனமுடைந்து டுவிட்டரில் பதிவு செய்து முதல்வரை டேக் செய்துள்ளார்.
அதில், எந்த ஆட்சி வந்தாலும் போலீஸ் குணம் மாறாது. வேலை வெட்டி இல்லாத இந்த நாளில் குடும்பம் நடத்துவது எவ்வளவு கஷ்டம். மனநலம் பாதிக்கப்பட்ட பையனுக்கு மருந்து வாங்க 500 வச்சிட்டு அலஞ்சிட்டிருந்தா அதையும் பிடுங்கிவிட்டு அனுப்புறாங்க. பையன் சாகட்டும் என்று விட்டுவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து 4 மணி நேரத்தில் அதிகாரிகள் வீடு தேடி வந்து மருந்தையும், 500 ரூபாய் பணத்தையும் ஒப்படைத்துள்ளனர். இதனால் அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.